இந்தியாவில் அல் ஜசீரா ஆங்கில சேனல்

இந்தியாவில் மார்ச் முதல் அல் ஜசீரா ஆங்கில சேனல்
கொல்கத்தா: பிரபல அரபு தொலைக்காட்சி நிறுவனமான அல்ஜசீரா இன்டர்நேஷனல் இந்தியாவிலிருந்து தனது ஆங்கில சேனலை வருகிற மார்ச் மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

அரபு நாடுகளில் மிகவும் புகழ் பெற்றது அல்ஜசீரா தொலைக்காட்சி. இதுவரை அரபு மொழியில் மட்டுமே செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த அல் ஜசீரா தற்போது ஆங்கில சானலை தொடங்கியுள்ளது.

2006ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இதன் உலக அளவிலான ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது. இருப்பினும் இந்தியாவில் மட்டும் தாமதமாகி வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பு தொடங்கக் கூடும் எனவும் அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் பிராந்திய விநியோகப் பிரிவு இயக்குநர் டயானா ஹொஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் இதழியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம். இதழியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டவை மட்டுமே எங்களது தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இதழியல் கண்ணோட்டத்துக்கு உட்படாத எதையும் நாங்கள் ஒளிபரப்புவதில்லை.

ஒசாமா பின் லேடனிடமிருந்து ஆடியோ மற்றும் வீடியோ டேப்புகளை நாங்கள் எளிதில் பெறுகிறோம் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் கூட அவற்றை உடனடியாக நாங்கள் ஒளி, ஒலி பரப்பி விடுவதில்லை. அவற்றின் நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை பரிசோதித்த பின்னர்தான் ஒளிபரப்புகிறோம்.

மேலும் யூதர்களின் ஆதரவையும் பெற்ற அரபு தொலைக்காட்சியாக அல் ஜசீரா விளங்குகிறது. இஸ்ரேலில் எங்களுக்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மற்ற ஆங்கில சானல்களைப் போலவே எங்களுக்கும் அங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குரல் இழந்தவர்களின் குரலாக அல் ஜசீரா விளங்குகிறது. அரபு உலகம், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல் ஜசீரா செயல்படுகிறது.

இந்திய ஒளிபரப்பு தாமதமாகி வருவது உண்மைதான். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கேத் தெரியவில்லை. வழக்கத்தை விட மிகவும் தாமதாகியுள்ளதை ஒப்புக் கொள்கிறோம்.

இருப்பினும் நாங்கள் மிகப் பொறுமையாக உள்ளோம். சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம்தான் எங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது. எனவே அதன் அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் பொறுமையோடுதான் இருந்தாக வேண்டும். இருப்பினும் மார்ச் மாதத்திற்குள் ஒளிபரப்புக்கு அனுமதி கிடைத்து விடும் என உறுதியாக நம்புகிறோம்.

பாகிஸ்தானும் பெரிய சந்தைதான். எனவே அங்கும் எங்களது பிசினஸை விரிவுபடுத்துவது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஹொஸ்கர்.

இந்திய செய்திப் பிரிவு தலைவர் அன்மோல் சக்சேனா கூறுகையில், இந்தியாவில் உள்ள பிராந்திய மற்றும் தேசிய தொலைக்காட்சி நிறுவனங்களுடன் செய்திப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா தொடர்பான செய்திகள், நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே இங்கு எங்களது நிறுவனத்தின் செயல்பாடு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றார் சக்சேனா.
 

No comments:

Post a Comment