ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - திருமதி. சகுந்தலா நரசிம்ஹன்





ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! -
திங்கள், 28 ஜூலை 2008 16:05

 திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.


எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.


மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.


ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.


என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.


இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்


  

2 comments:

Anonymous said...

click and read and pass it to your friends


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.............

MOHAMED said...

IF YOU WANT TO VERIFY THIS CORRECT, YOU CAN CALL HER DIRECTLY AND ENSURE THIS IS CORRECT OR NOT. DON'T BE EXHAUSTED BECAUSE OF THE WAY OF IMMODEST IN OTHER RELIGION. PUT YOUR OWN FAMILY WOMEN IN THAT PLACE, WHETHER IT IS CORRECT TO SHOW THEIR BEAUTY TO OTHERS OTHER THAN HUSBAND AND BLOOD RELEATIVES.

ASK YOUSELF THIS. THE ALMIGHTLY KNOWS THE GOOD FOR HUMAN BEING. DON'T YOU ACCEPT THIS?